சிறு தானியங்களின் சிறப்புகள்

சிறு தானியங்களின் சிறப்புகள்

ஐக்கிய நாடுகள் சபை 2023 -ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக பிரகடனம் செய்து, உலகம் முழுவதும் சிறு தானியத்தின் சிறப்புகளை கொண்டாடி வருகிறோம். உணவு தட்டுப்பாடு, பஞ்சகாலங்களில் அரிசி, கோதுமை உணவுகளுக்கு மாற்றாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகளை மேம்படுத்தும் உணவாக சிறுதானியங்களில் இருந்து செய்யப்படும் உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தற்போது ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் பாரம்பரிய உணவாக சிறு தானியங்கள் இருந்து வருகிறது. 

உலகில் மாறிவரும் பருவகால மாற்றங்கள், குறைவான மழை பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கு அதிகமாக உரப் பயன்பாடு ஏற்படுத்தும் சூழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை எதிர்வரும் காலங்களில் உலகளாவிய மக்கள் அனைவரும் சிறுதானியங்களை பிரதான உணவாக்கி கொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

தற்போதைய உற்பத்தியில் பெரும் அளவு பங்கு வகிக்கும் கோதுமை மற்றும் நெல் பயிர்களின் தொடர்ச்சியான ஒற்றைப் பயிரிடுவதால் விளைநிலங்கள் தங்கள் உற்பத்தி திறனை இழந்து நிற்கின்றன. நெல் விளைவதற்கு அதிக நாட்கள் மற்றும் மழை தேவைப்படும். ஆனால் சிறுதானியங்கள் மிதமான தட்பவெட்ப நிலையிலும், குறைவான நீர் வசதியிலும் மற்றும் சாதாரண மண் வளத்திலும் நன்கு செழித்து வளரும். நெல் உற்பத்திக்கு தேவைப்படும் நீரில் மூன்றில் ஒரு பங்கு நீர் இருந்தாலே சிறுதானியங்கள் பயிர்செய்கைக்கு போதுமானதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சிறு தானியங்கள் வறண்ட சூழல் அமைப்பை கொண்ட நிலப் பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது. குறிப்பிட்ட நிலத்தில் சிறுதானிய விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் அந்த நிலத்தின் பல்லுயிரி வளத்தையும் பாதுகாக்க முடியும்.

சிறுதானிய விவசாயம் குறித்த சமீபத்திய ஆய்வு சிறுதானியங்களை விளைவிப்பதன் மூலம் ஓராண்டில் ஏக்கருக்கு சுமார் 6 மில்லியன் லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும் என்று கூறுகிறது. மிக கடினமான கால நிலைகளையும் கூடத் தாங்கி வளரக்கூடிய திறன் பெற்றவையாக இவை இருப்பதால்,  வறட்சி  காலங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறுதானியங்கள் பெரும்பங்காற்றுகின்றன. உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறுதானியங்கள் விளைவிக்கப்படுகின்றது.

உலகளாவிய பெரும் தொற்று நோயாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின் மக்களின் உணவு முறையில் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு திறன் நிறைந்த உணவுகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன. நமது நாட்டின் உள்ளூர் பாரம்பரிய பயிர்கள் மீதான கவனமும், ஆதரவும் அதிகரித்து வருகின்றன.

அரிசியின் அளவைவிட சிறியதாக இருக்கும் சிறுதானியங்கள் குறுகிய கால பயிராகும். சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை  பயிரிடப்பட்டு 65 நாட்களில் அறுவடைக்க தயாராகிவிடும். நம் முன்னோர்கள் ஆரோக்கியத்திற்கு பிரதான காரணமான சிறுதானியங்கள் மருத்துவப்பயன்கள் நிறைந்தவை.

 கேழ்வரகு(Finger Millet)

இலங்கையின் குரக்கன் அறியப்படும் ராகி மற்றும் கேப்பை என்ற பெயர்களும் உண்டு. எத்தியோப்பியாவில் உயர்ந்த மலைப் பகுதிகளில் அறிமுகமாகிய இப்பெயர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேழ்வரகு வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. 

சிறு தானியங்களின் சிறப்புகள்

இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மலை பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. கேழ்வரகில் இருந்து கூழ், இட்லி, தோசை, புட்டு, கலி, கஞ்சி, ரொட்டி, பக்கோடா போன்ற பல வித உணவுகளை தயார் செய்து கொள்ளலாம்

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிக அளவு புரதம் மற்றும் நார்சத்துக் கொண்டதால் சக்கரை  நோயை கட்டுப்படுத்தும், மலச்சிக்கல் நீக்கும்.

 கேழ்வரகில் மற்ற தானியங்கள் அரிசி போன்றவற்றை விட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய்(மெனோபாஸ்) நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம்(Osteoporosis) ஏற்படாமல் தடுக்க உதவும்.

 கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோபான் (Tryp-tophan) அமினோ அமிலம் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.

 இதில் உள்ள லெசித்தின்(Lecithin), மெத்தியோனின்(Methionine) போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டவை.

 அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் உடலுக்கு வலிமை தரும் ரத்தசோகை வராமல் தடுக்கும்.

 தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவு ராகி. குறிப்பாக ஹைப்பர் தைராய்டு உள்ளவர்களுக்கு சிறந்த தானிய உணவு.

 கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தேவையான சத்துக்களை தரும்.

வரகு(Kodo Millets )

 இது பண்டைய தமிழ்நாட்டின் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல மெல்ல அருகி விட்டது. தற்போது மெதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால் வரகின்  பயன்பாடு மெல்ல மெல்ல கூடிக் கொண்டு வருகிறது. சிறுதானிய வகைக்குள் வரகும் ஒன்றாகும். வரகுக்கு ஏழு அடுக்கு தோல் உண்டு. 

சிறு தானியங்களின் சிறப்புகள்

அரிசி கோதுமையை காட்டிலும் வரகில்  நார்சத்து மிகவும் அதிகம். மாவு சத்து குறைந்தும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம். ஆரோக்கியத்துக்கும் நல்லது. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி, ஆகியவை இருக்கின்றன. தாது பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும் விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கும்.

 சாமை(Little Millets)

சிறு தானியங்களின் சிறப்புகள்

சிறுதானியங்களில் சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை  சாமையில் மற்ற சிறுதானியங்களை காட்டிலும் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெற செய்வதுடன், உடல் உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நெல்லரிசியை காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்துக் கொண்டது. சர்க்கரை நோயினை கட்டுப்படுத்துகின்றது. வயிறு சார்ந்த நோய்களுக்கு சாமை அரிசி நல்லது. மலச்சிக்கலை தடுக்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்கள் எண்ணிக்கை உயர்த்துகிறது.

 திணை(Foxtail Millet)

இது கிழக்கு ஆசியாவில் 10,000 ஆண்டுகளாக பயிரிடப்படுவதாக கூறப்படுகிறது. தானியங்களில் திணை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் வகிக்கின்றன. சீனாவில் வடமாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை. இதை மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்துகின்றனர். 

சிறு தானியங்களின் சிறப்புகள்

தினையை உயிர்சத்துக் கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். திணையில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு. அரிசி, கோதுமை, கேழ்வரகு காட்டிலும் இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. கோதுமையில் இருப்பதைவிட குறைவாக புரதம் இருந்தாலும், மற்ற பொருள்களோடு கலந்து உண்ணும் போது இவை சமன் செய்யப்படுகின்றது. இதயத்துக்கு பலம் சேர்க்கும் B1 வைட்டமின் திணையில் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இருக்கின்றது.

 கம்பு(Pearl Millet)

இது ஒரு புன்செய் நிலப்பயிர் தானியமாகும். உலகில் அதிகமாக பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடை தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55 சதவீதம் இடத்தை கம்புபிடித்திருக்கின்றது. இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லாம் மண்ணிலும் விளையும் தன்மையுடையது.

சிறு தானியங்களின் சிறப்புகள்

 கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என பல உயிர்சத்துகள் உள்ளதால் உணவுதரத்தில் முதலிடம் வகிக்கிறது. தானியங்களிலேயே அதிக அளவாக 11.8% புரோட்டீன்  கம்பில் தான் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும்,  கண்பார்வைக்கும் முக்கிய சத்தான வைட்டமின் ஏ-வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டின் கம்பு பயிரில் அதிக அளவு உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் துவங்கிய பெண்களுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை  குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

 சோளம்(Sorghum)

இது சிறுதானிய பயிராகும். சோளம் புல் வகையை சார்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவர பேரினம் ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும், வேறு சில கால்நடை தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேச்சல் நிலங்களில் இயற்கையாகவே வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுவதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள் எல்லா கண்டங்களையும் சேர்ந்த வெப்ப மண்டலம் மற்றும் குறைவெப்ப மண்டல பகுதிகளையும் தென்மேற்கு, பசிபிக் ஆஸ்திரேலியா பகுதிகளையும் தாயமாக கொண்டவை ஆகும்.

சிறு தானியங்களின் சிறப்புகள்

சோளம் அனைத்து பகுதிகளிலும் விளைய  ஏற்ற பயிராகும். தற்போது இது மழை குறைவாக பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகின்றது. சிறு வெள்ளை சோளமே  இந்தியாவினுடைய இயற்கை சோளமாகும். மக்காச்சோளத்தின் உற்பத்தியில் தற்போது இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ள நாடாகும். இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 

முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேக வைத்த அரிசி போன்று  பயன்படுத்தப்படுகிறது. முழு சோளத்தை அரைத்து அதன் மாவில் இருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளைச் சோளம் அரிசியை போன்ற தன்மையையும் அதைவிட பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருளாகும். சோளத்தில்  உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவ்வகை சிறுதானியங்கள் குறைந்த அளவே குளுக்கோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.

 குதிரைவாலி

இந்த சிறுதானியம் உலகில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் பெரும்பாலும் நெல் போன்ற பயிர்கள் விலையாத நிலங்களில் இவை அதிகமாக பயிரிடப்படுகிறது. இதன் அரிசியை வேக வைத்தும் தண்ணீரில் ஊற வைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது.

 இந்த தானியத்தில் நார்சத்து, மாவு சத்து, கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீசியம், போன்ற சத்துக்கள் நிறைவாக இருக்கிறது. உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது. ஆன்ட்டிஆக்சிடெண்டாக வேலை செய்கிறது.

சிறு தானியங்களின் சிறப்புகள்

 சிறுதானியங்கள் மற்றும் தானியங்கள் அனைத்திலும் நிறைந்த மருத்துவ பயன்களும், ஊட்டச்சத்துக்களும் கொண்டிருந்தாலும், ஒவ்வாமை சிலருக்கு ஏற்படலாம். அதனால் முதன்முதலாக ஒரு உணவை உண்ண ஆரம்பிக்கும் போது அந்த உணவால் ஒவ்வாமை ஏற்படுகின்றதா என்பதை அவதானித்த பின் உண்ண வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top